https://faq.whatsapp.com/web/28080002 BACKWARD CLASS TEACHERS WARDEN ASSOCIATION: JACTTO-GEO 2வது நாளாக போராட்டம்: நாளை உயர்மட்டக் குழு கூடுகிறது

Friday, 8 September 2017

JACTTO-GEO 2வது நாளாக போராட்டம்: நாளை உயர்மட்டக் குழு கூடுகிறது

 
ஜாக்டோ-ஜியோ அறிவித்த வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாக நேற்றும்  நடந்தது. நாளை சென்னையில் உயர் மட்டக்குழு கூடி அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்க  உள்ளனர்.  ஜாக்டோ-ஜியோ சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 
கடந்த 22ம் தேதி ஒருநாள்  அடையாள வேலை நிறுத்தம் நடத்திய பிறகு ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு  ஏற்படாத நிலையில் ஜாக்டோ-ஜியோ இரண்டாக பிரிந்தது. புதிய அணிக்கு  சுப்ரமணியன், மாயவன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
புதிய அணியினர் 7 மற்றும் 8ம் தேதிகளில் வேலை நிறுத்தம் நடத்துவது, 10ம்  தேதி சென்னையில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அறிவித்தனர். அதன்படி,  முதற்கட்ட வேலை நிறுத்தம் 7ம் தேதி நடந்தது. அதில் தமிழகம் முழுவதும் 7  லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். அவர்கள்  கைது செய்யப்பட்டு அன்று மாலையே விடுவிக்கப்பட்டனர். 
இதற்கிடையே,  மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தடை விதித்தது.  அரசும் அதிரடி உத்தரவு போட்டு வேலை நிறுத்தத்தில் இருந்து திரும்ப வேண்டும் என்றும்  தெரிவித்தது. ஆனால், புதிய அணியினர் அறிவித்தபடி நேற்றும் இரண்டாவது நாளாக  தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இரண்டு நாள் போராட்டத்தால்  அரசுப் பணிகள், பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 
இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ போராட்டம் நீடிக்குமா அல்லது வாபஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, மாயவன் ஆகியோர் கூறியதாவது: ஈரோட்டில்  முதல்வருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு 7, 8ம் தேதிகளில் வேலை  நிறுத்தம் மற்றும் மறியல் நடத்துவோம் என்று அறிவித்தோம். தொடர் வேலை  நிறுத்தம் குறித்து ஏதும் அறிவிக்கவில்லை. அதனால் அறிவித்தபடி இரண்டு  நாட்கள் வேலை நிறுத்தம் நடக்கிறது.
 இதற்கிடையே மதுரை உயர் நீதிமன்ற  கிளை எங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்து இருப்பதாக தகவல்  வந்துள்ளது.  இதுவரை எங்களுக்கு நீதி மன்றத் தரப்பில் இருந்து நோட்டீசோ,  தடையின் நகலோ வரவில்லை. மேலும், 14ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய  வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளது. இது தொடர்பாகவும் எங்களுக்கு நோட்டீஸ்   அல்லது நீதிமன்ற தகவல் வரவில்லை. இருப்பினும் நேற்று ஒருநாள் வேலை  நிறுத்தம் செய்தோம், இன்றும் செய்கிறோம். 
நாளை (10ம் தேதி) சென்னையில்  அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் உயர்மட்டக் குழு கூட்டம் நடக்க உள்ளது.  அடுத்தகட்ட போராட்டம் குறித்தும், நீதிமன்ற உத்தரவு குறித்தும் ஆலோசிக்க  இருக்கிறோம். அதற்கு பிறகு முடிவுகளை அறிவிக்க இருக்கிறோம். இவ்வாறு அன்பரசு, மாயவன் தெரிவித்தனர். இதனால், ஜாக்டோ-ஜியோ போராட்டம் மற்றும் வேலை நிறுத்தம் தொடருமா என்பது இன்று மாலையில்தான் தெரியும்.

No comments:

Post a Comment