Pages

Tuesday, 11 July 2017

நாடு முழுவதும் 3.33 கோடி பேர் 'பான் - ஆதார்' எண் இணைப்பு



நாடு முழுவதும் இதுவரை, 3.33 கோடி பேர், 'பான்' கார்டுடன், 'ஆதார்' விபரங்களை
இணைத்துள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தனிநபர், நிறுவனங்களின் கணக்கு பரிமாற்ற விபரங்களை முறைப்படுத்தும் வகையில், 'பான்' கார்டை, வருமான வரித்துறை வழங்குகிறது. வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் சிலர், வெவ்வேறு பெயர், முகவரிகளில் போலியாக, 'பான்' கார்டு பெறுவது அதிகரித்தது. தனிநபரின் கருவிழி, கை ரேகைகள் பதிவு செய்து, ஆதார் அட்டை வழங்கப்படுகிறது.
கறுப்புப் பண ஒழிப்புக்காக, பணம் மறு சீரமைப்பு நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக, போலி, 'பான்' கார்டுகளை ஒழிக்க திட்டமிட்டு, அவற்றை ஆதார் எண்ணுடன் இணைக்க முடிவு செய்தது.
இந்த இணைப்புக்காக, வருமான வரித்துறை இணையதளத்தில், பிரத்யேக பிரிவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கணக்கு தாக்கலுக்கு, 'பான்' கார்டு- மற்றும் ஆதார் இணைப்பும் கட்டாயம் என, அறிவுறுத்தப்பட்டது. பான்- - ஆதார் இணைப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம், வருமான வரித்துறைக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியது.
இதையடுத்து, பான் கார்டு, -ஆதார் விபரங்கள் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே, கணக்கு தாக்கல் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தனிநபர், வர்த்தக துறையினர் என, அனைத்து தரப்பினரும், ஆதார் விபரங்கள் இணைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பான் - ஆதார்- இணைப்பின் போது, பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்றவை, முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் இதுவரை, 3.33 கோடி பேர், தங்களின் பான் எண்ணுடன், ஆதார் விபரங்களை இணைத்துள்ளனர். துவக்கத்தில் மந்தமாக இருந்த இப்பணி, தற்போது வேகமெடுத்து உள்ளதாக, வருமான வரித்துறையினர் தெரிவித்து உள்ளனர்

No comments:

Post a Comment